தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 98 பேர் கைது
பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.மு.மு.க.வினர் 98 பேர் கைது செய்யப்பட்டனர்.;
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக போர் நடந்து வருகிறது. இதில் 2 நாடுகளை சேர்ந்த பலர் உயிரிழந்து உள்ளனர். இந்தநிலையில் பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஊட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அப்துல் சமது தலைமை தாங்கினார். மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் பழனி பாரூக், மாவட்ட செயலாளர் அபுதாஹிர், ஊட்டி பெடரெஷன் பள்ளிவாசல் இமாம் முகமது அலி ரஷாதி, திப்பு சுல்தான் மர்க்கஸ் தலைமை இமாம் இப்ராஹிம் மிஸ்பாஹி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக த.மு.மு.க.வினர் 98 பேர் கைது செய்யப்பட்டனர்.