பிளஸ்-2 தேர்வில் 96.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி.யில் 88.70 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.;
நெல்லை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 96.07 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி.யில் 88.70 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
பிளஸ்-2
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் கடந்த மே மாதம் நடந்த இந்த தேர்வை 191 மேல்நிலைப்பள்ளிக்கூ டங்களை சேர்ந்த 20 ஆயிரத்து 90 மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர். நேற்று தேர்வு முடிவு வெளியானதில், 19 ஆயிரத்து 301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 8 ஆயிரத்து 505 மாணவர்களும், 10 ஆயிரத்து 796 மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 96.07 சதவீதம் ஆகும்.
பிளஸ்-2 பரீட்சையை சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 837 மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர். அதில், 3 ஆயிரத்து 672 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.70 சதவீதம் ஆகும்.
நெல்லை-வள்ளியூர்
நெல்லை கல்வி மாவட்டத்தில் 9 ஆயிரத்து 840 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 9 ஆயிரத்து 554 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 95.9 சதவீதம் ஆகும்.
வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 413 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 75 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.73 சதவீதம் ஆகும்.
நெல்லை மாவட்டம் மாநில அளவில் 11-வது இடத்தை பிடித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
அரசு பள்ளிக்கூடங்கள்
மாவட்டத்தை பொறுத்தவரையில் 49 அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 538 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 5 ஆயிரத்து 120 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 92.45 சதவீத தேர்ச்சி ஆகும்.
நெல்லை மாவட்டத்தில் 71 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகள் 6, அரசு உதவி பெறும் பள்ளிகள் 9, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் 56.
எஸ்.எஸ்.எல்.சி.
இதேபோல் தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் 280 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 23 ஆயிரத்து 290 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர். இதில் 20 ஆயிரத்து 659 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 9 ஆயிரத்து 488 மாணவர்களும், 11 ஆயிரத்து 171 மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இது 88.70 சதவீதம் ஆகும்.
நெல்லை மாவட்டம் மாநில அளவில் 29-வது இடத்தை பிடித்துள்ளது. மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு மாநில அளவில் நெல்லை மாவட்டம் 17-வது இடத்தை பிடித்தது. இந்த ஆண்டு 29-வது இடத்துக்கு சென்று உள்ளது. தேர்ச்சி விகிதம் கடந்த 2019-ம் ஆண்டு 96.23 சதவீதமாக இருந்தது. தற்போது 88.70 சதவீதமாக குறைந்து உள்ளது.
சேரன்மாதேவி
சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 751 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 96 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 86.21 சதவீதம் ஆகும்.
நெல்லை கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 103 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 9 ஆயிரத்து 997 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.4 சதவீதம் ஆகும். வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 436 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 566 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 88.30சதவீதம் ஆகும்.
100 சதவீத தேர்ச்சி
மொத்தமுள்ள 280 பள்ளிக்கூடங்களில் 88 பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 93 அரசு பள்ளிக்கூடங்களில் 11 பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றது. 86 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13 பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 101 மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 64 பள்ளிக்கூடங்கள் 100 சதவீத தேர்ச்சி கண்டது.
நெல்லை மாவட்டத்தில் 72 பேர் கணிதத்திலும், 59 பேர் அறிவியலிலும், 18 பேர் சமூக அறிவியலிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்
மாணவ-மாணவிகள் உற்சாகம்
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதையொட்டி ஏராளமான மாணவ-மாணவிகள் தங்களது பள்ளிக்கூடங்களுக்குச் சென்று மதிப்பெண் பட்டியலை பார்த்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
சில மாணவ-மாணவிகள் வீடுகளில் இருந்தே செல்போன் மற்றும் லேப்-டாப்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொண்டனர். மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றதை அறிந்ததும் அவர்களின் பெற்றோர் இனிப்பு தயார் செய்து வழங்கி மகிழ்ந்தனர். மேலும் அருகில் உள்ள நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை சகோதரிகள் மற்றும் தோழிகள் தோளில் தூக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். மாணவ, மாணவிகள் தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பல மாணவிகள் தங்களுடைய ஆசிரியைகளின் காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றுச்சென்றனர்.