துபாயில் இருந்து சென்னைக்கு பாதத்தில் மறைத்து கடத்திய ரூ.94 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னைக்கு பாதத்திலும், லேப்டாப் சார்ஜரிலும் மறைத்து கடத்திய ரூ.94 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 888 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-01-28 08:03 GMT

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அவரது காலில் அணிந்திருந்த ஷூ சாக்ஸை கழற்றியபோது, தங்கத்தை பேஸ்ட் போல் மாற்றி அதை கறுப்பு நிற பாலித்தீன் பையில் மறைத்து கால் பாதத்தில் பேஸ்ட் போட்டு ஒட்டி அதன் மேல் சாக்சை அணிந்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 82 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 340 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 2 பயணிகளின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த லேப்டாப் சார்ஜர் பின்னில் உருளை வடிவ தங்க கம்பிகளை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ.27 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 548 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.94 லட்சத்து 14 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 888 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்