விழுப்புரம் மாவட்டத்தில்பிளஸ்-2 தேர்வில் 90.66 சதவீதம் தேர்ச்சிகடந்த ஆண்டைவிட குறைந்தது
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 90.66 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். ்கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைந்தது.;
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் 101 தேர்வு மையங்களில் பிளஸ்-2 தேர்வு நடந்தது.
இந்த தேர்வை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 91 பள்ளிகளில் இருந்தும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 98 பள்ளிகளில் இருந்தும் ஆக மொத்தம் 189 பள்ளிகளில் இருந்து 10,762 மாணவர்களும், 10,804 மாணவிகளும் என மொத்தம் 21,566 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
90.66 சதவீதம் தேர்ச்சி
இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 9,366 மாணவர்களும், 10,186 மாணவிகளும் என மொத்தம் 19,552 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.3 மற்றும் மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 94.28. மாவட்டத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 90.66 ஆகும்.
கடந்த 2021-22-ம் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் பிளஸ்-2 தேர்வில் 92.08 சதவீத தேர்ச்சி பெற்றது. இதனை காட்டிலும் தற்போது விழுப்புரம் மாவட்டம் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 1.42 தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
33-வது இடத்துக்கு தள்ளப்பட்டது
மேலும் இந்த தேர்ச்சியின் மூலம் தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் 33-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 27-வது இடத்தில் இருந்த விழுப்புரம் இந்த ஆண்டு மேலும் 6 இடத்துக்கு பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் என்றாலே கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்ற பெயர் பெற்று வருகிற நிலையில் அதற்கேற்றாற்போல் இந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 பொதுத்தேர்விலும் விழுப்புரம் மாவட்டம் 33-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது கல்வித்துறை அதிகாரிகள் மத்தியில் மிகவும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.