8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-1 தேர்வில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி

8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவில் 90 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டுகளைவிட தேர்ச்சி சதவீதம் இந்த ஆண்டு குறைந்துள்ளது.

Update: 2022-06-27 23:55 GMT

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடந்து வந்த நிலையில், கடந்த 2017-18-ம் கல்வியாண்டு முதல் பிளஸ்-1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டு, அதன்படி தேர்வு நடந்து வருகிறது. அந்தவகையில் 5-வது ஆண்டாக இந்த முறை பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு கடந்த மாதம் (மே) 10-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடந்து முடிந்தது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 85 ஆயிரத்து 51 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தனர். இவர்களில் இந்த தேர்வை 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 மாணவ-மாணவிகள் எழுதியதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதில் 7 லட்சத்து 59 ஆயிரத்து 856 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் 90.07 ஆகும். தேர்ச்சி பெற்றவர்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்கள், 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவிகள், ஒரு திருநங்கையும் அடங்குவார்கள். அந்தவகையில் இந்த ஆண்டும் வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி (10.13 சதவீதம் அதிகம்) பெற்றுள்ளனர்.

தேர்ச்சி சதவீதம் குறைவு

பிளஸ்-1 தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும்போது, இந்த ஆண்டு பெருமளவில் அது குறைந்துள்ளது. பிளஸ்-1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்ட பிறகு, நடத்தப்பட்ட தேர்வுகளில் இந்த தேர்ச்சி சதவீதம்தான் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது.

கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் 91.3 சதவீதம், 2018-19-ம் கல்வியாண்டில் 95 சதவீதம், 2019-20-ல் 96.04 சதவீதம், 2020-21-ம் ஆண்டில் கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த தேர்வின் தேர்ச்சி சதவீதம் 90.07 சதவீதமாக குறைந்து இருக்கிறது.

குறிப்பாக, தேர்வு நடந்த கடந்த 2019-20-ம் கல்வியாண்டில் 96.04 சதவீதத்துடன், இதனை ஒப்பிடுகையில், 5.97 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. தேர்வில் தோல்வி அடைந் தவர்களில் பெரும்பாலானோர் மாணவர்களாகவே இருக்கின்றனர். அதிலும் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர்.

பாடப்பிரிவுகள் வாரியாக...

இதுதவிர மாற்றுத்திறனாளி மாணவர்களாக தேர்வு எழுதிய 4 ஆயிரத்து 470 பேரில், 3 ஆயிரத்து 899 பேரும், சிறைவாசிகளாக தேர்வு எழுதிய 99 பேரில் 89 பேரும் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். பள்ளிகள் வகைப்பாடு வாரியாக தேர்ச்சி சதவீதத்தை பார்க்கையில், அரசு பள்ளிகள் 83.27 சதவீதமும், உதவிபெறும் பள்ளிகள் 91.65 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 99.35 சதவீதமும், இருபாலர் பள்ளிகள் 90.44 சதவீதமும், பெண்கள் பள்ளிகளில் 94.90 சதவீதமும், ஆண்கள் பள்ளிகளில் 78.48 சதவீதமும் பெற்றுள்ளனர்.

இதேபோல், பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதத்தில், அறிவியல் பாடப்பிரிவில் 93.73 சதவீதமும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 85.73 சதவீதமும், கலைப்பிரிவுகளில் 72.49 சதவீதமும், தொழிற்பாடப் பிரிவுகளில் 76.15 சதவீதமும் தேர்ச்சி கிடைத்துள்ளது. முக்கிய பாடங்களின் வரிசையில் தேர்ச்சி சதவீதம் புள்ளிவிவரத்தின்படி பார்க்கும்போது, தாவரவியல், விலங்கியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் போன்றவற்றில் தேர்ச்சி சதவீதம் அதிகமாக குறைந்திருக்கிறது. மற்றவற்றில் 90 சதவீதத்துக்கு மேல் என்ற அளவிலேயே தேர்ச்சி சதவீதம் உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட கற்றல் இடைவெளியே தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மதிப்பெண் பட்டியல்

தேர்வு முடிவு வெளியான நிலையில், வருகிற 1-ந் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவ-மாணவிகள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் மற்றும் தேர்வில் பங்கேற்காதவர்களுக்கு துணைத்தேர்வு வருகிற ஆகஸ்டு 2-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்