அனுமதியின்றி ஊர்வலம் நடத்த முயன்ற 19 பேர் கைது

கம்பத்தில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்த முயன்ற 19 பேர் கைது செய்யப்பட்டனர். 40 விநாயகர் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-09-04 16:02 GMT


போலீசார் அனுமதி மறுப்பு


கம்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணியினருக்கு ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினருக்கு ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வைக்க போலீசார் அனுமதி மறுத்தனர்.


அவர்கள் அனுமதியின்றி வைத்திருந்த 18-க்கும் மேற்பட்ட சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து முல்லைப்பெரியாற்றில் கரைத்தனர். இவையில்லாமல் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் வீடுகள் மற்றும் தனியார் கோவில்களில் வைக்கப்பட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட சிலைகளை ஆற்றில் கரைக்கப்படாமலே இருக்கிறது. மேலும் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று கரைப்பதற்கு பல்வேறு போராட்டங்கள், போலீசாரிடம் அனுமதி கேட்டு பல முறை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதி தர மறுத்து வருகின்றனர்.


40 விநாயகர் சிலைகள் பறிமுதல்


இந்நிலையில் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று ஆற்றில் கரைக்க நீதி கேட்டு மகாத்மா காந்தியிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில்  விழா கமிட்டியினர் அனுமதியின்றி டிராக்டர்களில் விநாயகர் சிலையை ஏற்றி ஊர்வலம் செல்ல முயன்றனர்.


தகவலறிந்த உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார் அங்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் 40 விநாயகர் சிலைகளை கம்பம்-கோம்ைப ரோடு வேப்பமரத்து திடல் அருகே சாலையின் நடுவழியில் இறக்கி வைத்து போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.


19 பேர் கைது


தகவலறிந்த உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூனன் அங்கு வந்து சிலைகளை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த சிலைகளை போலீசார் லாரி மற்றும் டிராக்டர்களில் ஏற்றி சென்று காமயகவுண்டன்பட்டி முல்லைப்பெரியாற்றில் கரைத்தனர்.


இதற்கிடையில் அனுமதியின்றி ஊர்வலம் செல்ல முயன்ற 19 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ரூபேஷ் குமார் மீனா நேரில் சென்று விசாரணை நடத்தினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்