சூதாடிய 9 பேர் கைது
குலசேகரன்பட்டினம் அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.;
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரொக்கப்பணம் ரூ.81,500 மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் ரோந்து
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூழையன்குண்டு காட்டுப்பகுதியில் 9 பேர் கொண்ட ஒரு கும்பல் கூட்டாக அமர்ந்திருந்தனர்.
இதையடுத்து அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் வெங்கடராமானுஜபுரம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் சுடலை (வயது 47), கொம்பன்குளம் பகுதியை சேர்ந்த வேதமுத்து மகன் ஆண்டி (42), அம்மமுத்து (50), சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த அய்யன்கண்ணு மகன் சுடலைமுத்து (47), முக்காணி பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் ராஜ்குமார் (41), நாகர்கோவில் நெய்யூர் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் மகன் சேவியர் ராஜன் (40), வட்டவிளை பகுதியை சேர்ந்த நாராயணன் (60), நாகர்கோவில் முருங்கூர் பகுதியை சேர்ந்த மரிய அந்தோணி மகன் ராஜா (36) மற்றும் உடன்குடி அய்யா நகரைச் சேர்ந்த சுந்தர் (56) ஆகியோர் என்பதும், சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
9 பேர் கைது
இதையடுத்து 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சீட்டுக்கட்டுகள், ரொக்கப்பணம் ரூ.81,500 மற்றும் 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.