தொழிலாளி கொலையில் 9 பேர் கைது; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

நெல்லையில் நடந்த தொழிலாளி கொலையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-11 19:53 GMT

நெல்லையில் நடந்த தொழிலாளி கொலையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளி வெட்டிக்கொலை

நெல்லை பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி கோனார் தெருவை சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவருடைய மகன் மாயாண்டி (வயது 38). தொழிலாளியான இவர் தனது வீட்டின் அருகில் மளிகை கடையும் நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் சீவலப்பேரி- கலியாவூர் சாலையை ஒட்டியுள்ள பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றபோது, அவரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இறந்த மாயாண்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவில் பிரச்சினை

போலீசாரின் விசாரணையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந்தேதி சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக மாயாண்டி தற்போது வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

அதாவது, சீவலப்பேரி சுடலைமாடசாமி கோவிலில் உள்ள கடையை நடத்துவது தொடர்பாக கோவில் நிர்வாகிகளுக்கும், மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த விவகாரம் முற்றியதில் கோவில் பூசாரி சிதம்பரம் என்ற துரை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனை தடுக்க முயன்ற நடராஜ பெருமாளுக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு நெல்லை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் கொலையாளிகளுக்கு எதிராக சாட்சியம் அளிப்பவர்களை மிரட்டும் வகையில் மாயாண்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

உடலை வாங்க மறுத்து போராட்டம்

இதற்கிடையே, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து ேநற்று உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாதவ மகா சபை இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் பொட்டல் துரை யாதவ், மாவட்ட செயலாளர் வள்ளி நாயகம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி அங்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. அவர்கள், மாவட்ட கலெக்டரிடமும் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்து விட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

பாதுகாப்பு இல்லை

இதுகுறித்து போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ''சீவலப்பேரியில் ஒரு குடும்பத்தினரின் கோவிலை அபகரிக்கும் நோக்கில் மற்றொரு சமுதாயத்தினர் செயல்பட்டனர். அதை எதிர்த்த பூசாரியை கொலை செய்தனர். அவருடைய மனைவிக்கு அரசு வேலை வழங்குவதாக அப்போது நடந்த பேச்சுவார்த்தையின்போது கலெக்டர் உறுதிமொழி பத்திரம் வழங்கினார். ஆனால் 1½ ஆண்டு ஆகியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் யாதவ சமூகத்தினருக்கு பாதுகாப்பு இல்லை. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதே தெரியாத அளவுக்கு அப்பாவியை கொலை செய்து உள்ளனர். யாதவர்கள் எங்கேயும் வெளியே செல்ல முடியவில்லை. இதற்கெல்லாம் விடை கிடைக்காமல் மாயாண்டி உடலை வாங்க மாட்டோம்''் என்று தெரிவித்தனர்.

முன்னதாக மாயாண்டியின் உறவினர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தகவல் வெளியானது. இதனால் கொக்கிரகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு செல்லும் வழியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணித்தனர்.

9 பேர் கைது

இதற்கிடையே மாயாண்டியை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் இந்த கொலை தொடர்பாக நெல்லை அருகே உள்ள பல்லிக்கோட்டையைச் சேர்ந்த மாடசாமி (24), சுபாஷ் (27), சீவலப்பேரியைச் சேர்ந்த முத்துராஜ், கொக்கிகுமார் என்ற வெயிலுகுமார் மற்றும் 18 வயது நிரம்பிய 5 சிறுவர்கள் என 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சீவலப்பேரி பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்