9½ லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை இம்மாத இறுதியில் தொடங்க திட்டம்
பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் 9½ லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை இம்மாத இறுதியில் தொடங்க திட்டம் கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தின் பசுமை பரப்பளவினை அதிகரிக்க மேற்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பசுமை குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
நமது பெரம்பலூர் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை 9 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்த எண்ணிக்கையினை பெருக்குவதற்கு அரசின் சார்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் மூலம் மரக்கன்றுகளை நடுவதற்கு பள்ளி, கல்லூரி வளாகங்கள், அரசு அலுவலக வளாகங்கள், புறம்போக்கு நிலங்கள், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 130 எக்டர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்குள் 130 எக்ேடரிலும் மரக்கன்றுகளை நடுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியின் முதற்கட்டமாக இம்மாத 3-வது வாரத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் தோண்டும் பணிகள் தொடங்கப்பட்டு, 4-வது வாரத்தில் தொடக்கமாக 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் மிகப்பெரிய அளவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, மரக்கன்றுகளை நடும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அனைத்து துறைகளின் அலுவலர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். குளங்கள், ஏரிகளின் கரைகளில் பனைமர விதைகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் முதற்கட்டமாக வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் அருகே அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, மாவட்ட வன அலுவலர் குகனேஷ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன், வேளாண்மை துறை இணை இயக்குனர் (பொறுப்பு) கீதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சரண்யா, வனச்சரகர் பழனிக்குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.