இணையதளத்தில் பொருட்கள் வாங்கினால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறி வாலிபரிடம் ரூ.9¾ லட்சம் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது.
அதிக கமிஷன்
லால்குடி கல்லகம் பகுதியை சோ்ந்தவர் பாலசந்திரன் (வயது 30). இவா் ஒரு இணைய முகவரியில் பகுதி நேர வேலை தேடி உள்ளார். இதனை பயன்படுத்தி ஒரு மர்ம நபர் பாலசந்திரனை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு 640550.காம் என்ற இணையத்திற்குள் சென்று பொருட்கள் வாங்கினால் அதிக கமிஷன் தொகை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த இணையதளத்தில் பண பரிவர்த்தனைக்காக கணக்கு தொடங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதனை நம்பி பாலசந்திரன் அந்த இணையதளத்தில் ஒரு கணக்கு தொடங்கினார். முதலில் ரூ.300 செலுத்தி ஒரு பொருளை வாங்கியுள்ளார். அதற்கு கமிஷனாக ரூ.30 ரூபாய் பாலசந்திரன் கணக்குக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து ரூ.10 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என்று பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.9 லட்சத்து 89 ஆயிரத்து 511-ஐ செலுத்தியுள்ளார். அதற்கான கமிஷன் தொகை இணையதளத்தில் காட்டப்பட்டாலும், தனது வங்கி கணக்குக்கு வந்து சேரவில்லை.
போலீசில் புகார்
இது குறித்து அந்த மர்ம நபரிடம் தொடர்பு கொண்ட போது அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் தான் நூதன முறையில் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாலசந்திரன் இதுபற்றி திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.