ரெயில் தீப்பிடித்து 9 பேர் பலியான விபத்து: சுற்றுலா குழுவுடன் வந்த சமையல்காரர் உள்பட 5 பேர் கைது

ரெயில் தீப்பிடித்து 9 பேர் பலியான விபத்து தொடர்பாக, சுற்றுலா குழுவுடன் வந்த சமையல்காரர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.;

Update: 2023-08-29 00:09 GMT

மதுரை,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஆன்மிக சுற்றுலாவுக்காக கடந்த 26-ந் தேதி மதுரை வந்திருந்த 63 பயணிகள் கொண்ட குழுவினரின் ரெயில் பெட்டி மதுரை ரெயில் நிலையத்தில் போடி லைன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது ரெயிலில் இருந்தவர்கள் கியாஸ் சிலிண்டர் மூலம் ரெயில் பெட்டிக்குள் டீ போட்டபோது, கியாஸ் கசிவு ஏற்பட்டு பெட்டி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் 9 சுற்றுலா பயணிகள் உடல் கருகி பலியாகினர். இது தொடர்பாக மதுரை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் பலியான 9 பேரின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

காயம் அடைந்த 8 பேரில் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் அவர்களது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர், சீதாபூர், அயோத்தி, ஷாஜகான்பூர் ஆகிய பகுதிகளுக்கு திரும்பிச் சென்றுவிட்டனர்.

இதுபற்றி ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. வனிதா உத்தரவின் பேரில், சூப்பிரண்டுகள் செந்தில்குமார், பொன்ராமு, மதுரை ரெயில்வே துணை சூப்பிரண்டு பொன்னுசாமி, தடய அறிவியல் துறை துணை இயக்குனர் பெருமாள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

5 பேர் கைது

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கியாஸ் சிலிண்டர்கள், மண்எண்ணெய், ஸ்டவ், நிலக்கரி, விறகு கட்டைகள், மளிகை சாமான்கள், காய்கறிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்த ஆன்மிக சுற்றுலாவுக்கு ஹரிஸ்குமார் என்ற பப்பு பசின் என்பவர் ஏற்பாடு செய்துள்ளார் என்பதும், தடை செய்யப்பட்ட, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும், எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்கள் ரெயில் பெட்டிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் ஹரிஸ்குமார் என்ற பப்பு பசின் (வயது 61), அங்குல் கஷ்யப் (32) மற்றும் தீபக் கஷ்யப் (20) ஆகியோர் தீ விபத்தில் பலியாகியவர்கள் ஆவர். எனவே சத்ய பிரகாஷ் ரஸ்தோகி (47), நரேந்திர குமார் (61), ஹர்தீப்சகானி (24), தீபக் (23), கபம் கஸ்யப் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சிறையில் அடைப்பு

இவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, 5 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தண்டனை

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 304 (2), 285 மற்றும் இந்திய ரெயில்வே சட்டம் பிரிவு 164 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த பிரிவு 174 நீக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304 (2) என்பது, உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே கவனக்குறைவாக செய்யும் செயலுக்காக பதிவு செய்யப்படுவதாகும். இந்த குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால், 2 வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

பிரிவு 285 என்பது, நெருப்பை கவனமாக கையாளாமல் அஜாக்கிரதையாக இருப்பது. இதற்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

மேற்கண்ட 5 பேரும்தான் சம்பவத்தின்போது தப்பி ஓடி தலைமறைவானவர்கள் என கூறப்படுகிறது. போலீசாரின் தீவிர தேடுதலுக்கு பின்னர் நேற்று முன்தினம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

கைதானவர்களில் நரேந்திர குமார் டிராவல்ஸ் நிறுவனம் நியமித்த சுற்றுலா வழிகாட்டி ஆவார். ஹர்தீப் சகானி சமையல்காரர். தீபக் சுற்றுலா உதவியாளர். மற்ற 2 பேரும் சமையல் உதவியாளர்களாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்