வேலூர் பேரூராட்சியில் 9 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நடைபெறாத பணிகளுக்கு நடந்ததாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி வேலூர் பேரூராட்சியில் 9 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மண்டல உதவி இயக்குனர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.;

Update: 2022-09-21 19:30 GMT

பரமத்திவேலூர்:-

நடைபெறாத பணிகளுக்கு நடந்ததாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறி வேலூர் பேரூராட்சியில் 9 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் மண்டல உதவி இயக்குனர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேரூராட்சி கூட்டம்

வேலூர் பேரூராட்சி மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடந்தது. இதில் தி.மு.க., பா.ம.க., சுயேச்சை கவுன்சிலர்கள் என 16 பேர் கலந்து கொண்டனர். இதில் 53 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு கவுன்சிலர்கள் அனைவருக்கும் நகல் வழங்கப்பட்டது. அப்போது 18 வார்டுகளிலும் நடந்த பல்வேறு பணிகளில் தவறு நடந்து இருப்பதாக துணைத்தலைவர் ராஜா உள்பட 5 தி.மு.க. கவுன்சிலர்கள், பா.ம.க.வை சேர்ந்த ஒருவர், 3 சுயேச்சை கவுன்சிலர்கள் என 9 பேர் கேள்வி எழுப்பினர். அப்போது, பணிகள் நடைபெறாமல் பணி நடந்ததாக கூறி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நகல் கொடுத்துள்ளீர்கள். இதனை கண்டிக்கிறோம் என்றனர்.

அப்போது தலைவர் லட்சுமிமூர்த்தி, செயல் அலுவலர் (பொறுப்பு) சரவணன் இருவரும் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.

உதவி இயக்குனர் சமரசம்

இதனால் ஆத்திரம் அடைந்த 9 கவுன்சிலர்களும் கூட்ட அரங்கில் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 12.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு 9.30 மணி வரை நீடித்தது. தகவல் அறிந்த சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ்ராம், பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள், செயல் அலுவலர் (பொறுப்பு) சரவணன் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெரும்பாலான கவுன்சிலர்களின் ஆதரவு இல்லாததால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று கூறினர். இதைதொடர்ந்து சமாதானம் அடைந்த கவுன்சிலர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நேற்று முழுவதும் பேரூராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.

தவறு நடக்கவில்லை

இந்த விவகாரம் தொடர்பாக பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி கூறுகையில், நான் ஒரு பெண் தலைவர் என்பதால், கவுன்சிலர்கள் யாரும் என்னை மதிப்பது இல்லை. பேரூராட்சியில் இதுவரை எந்த பணிகளும் நடக்கவில்லை. எனவே எந்த தவறுகளும் நடக்கவில்லைஎன்றார்.

Tags:    

மேலும் செய்திகள்