பூங்காக்களை முறையாக பராமரிக்காத 87 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் - மாநகராட்சி நடவடிக்கை

பூங்காக்களை முறையாக பராமரிக்காத 87 ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதித்து பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

Update: 2022-07-13 14:59 GMT

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 738 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 571 பூங்காக்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்தத்தின்படி தேவையான எண்ணிக்கையில் தகுதியுடைய பணியாளர்களை நியமித்தல், பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு மற்றும் பூங்காவின் நுழைவு வாயிலில் பார்வை நேரம், பணியாளர்களின் எண்ணிக்கை அடங்கிய விவரங்கள் காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

பூங்கா பராமரிப்பு பணிகளில் காவலர், தூய்மை பணியாளர் மற்றும் தோட்ட பராமரிப்பாளர் போன்ற ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையை விட குறைவான அளவில் பணியாளர்கள் இருந்தால் ரூ.500 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து 3 முறைக்கு மேல் பணியாளர் பற்றாக்குறை கண்டறியப்பட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

பூங்காவை சரிவர சுத்தம் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு ரூ.600-ம், கழிவறை பகுதிகளை சரிவர சுத்தம் செய்யாவிட்டால் நாளொன்றுக்கு ரூ.2000-ம் அபராதமாக விதிக்கப்படுகிறது.

பூங்காவில் உள்ள மரம், செடி, கொடி மற்றும் புல்தரைகளை பராமரிப்பதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 4 ஆயிரம் சதுர அடி வரையிலான பூங்காக்களில் ரூ.2,500-ம், 4 ஆயிரம் சதுர அடிக்கு மேலான பூங்காக்களில் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் ஜூலை 7-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் பராமரிப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாத ஒப்பந்த நிறுவனங்களுக்கு 1 லட்சத்து 35 ஆயிரத்து 590 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒப்பந்தத்தில் தெரிவித்துள்ள எண்ணிக்கையின்படி பணியாளர்கள் இல்லாத காரணத்திற்காக 18 ஒப்பந்ததாரர்களுக்கு 28 ஆயிரத்து 90 ரூபாயும், பராமரிப்பு பணிகளில் உள்ள குறைபாடுகளுக்காக 69 ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்