வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் 86 சதவீதம் நீர் இருப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் 86 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து ஏரி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.;

Update: 2023-10-22 22:51 GMT

சென்னை,

சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நடந்த மோசமான நிகழ்வுகளால் செம்பரம்பாக்கம் ஏரியின் பெயரை கேட்டாலே கெஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கினாலே செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பது வழக்கம். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நீர் சேமிக்கப்பட்டால் அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உபரி நீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்படும். அந்தவகையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் 86 சதவீதம் நீர் இருப்பு வந்து உள்ளது.

குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 645 மில்லியன் கனஅடி (3.6 டி.எம்.சி.) ஆகும். ஆனால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தற்போது 3 ஆயிரத்து 135 மில்லியன் கனஅடி (3.1 டி.எம்.சி.) அதாவது 86.01 சதவீதம். இருப்பு உள்ளது. தொடர்ந்து 153 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 188 கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. மழையும் 1 மில்லி மீட்டர் என்ற அளவில் பெய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 2 ஆயிரத்து 784 மில்லியன் கனஅடி (2.7 டி.எம்.சி.) நீர் இருந்தது.

பிற ஏரிகளின் நீர்மட்டம்

இதுதவிர, 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி (3.3) டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரிக்கு, கிருஷ்ணா நதி நீர் கால்வாய் மூலம் மழைநீர் 90 கனஅடி நீர் வருகிறது. இதன் மூலம், ஏரியின் கொள்ளளவு 2 ஆயிரத்து 203 மில்லியன் கனஅடி (2.2 டி.எம்.சி.) ஆக நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. குடிநீர் தேவைக்காக இங்கிருந்து 545 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரிக்கு 102 கனஅடி நீர் வரத்து மூலம், ஏரியின் கொள்ளளவு 507 மில்லியன் கனஅடியாக இருந்து வருகிறது. இங்கிருந்து 10 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

அதேபோல் 3 ஆயிரத்து 300 மில்லியன் கனஅடி (3.3 டி.எம்.சி.) கொள்ளவு கொண்ட புழல் ஏரிக்கு 270 கனஅடி வீதம் நீர்வரத்து மூலம் ஏரியின் கொள்ளளவு 2,522 மில்லியன் கனஅடி (2.5 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. இதேபோல், 500 மில்லியன் கனஅடி (1/2 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 456 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக 15 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை

வீராணம் ஏரிக்கு 420 கனஅடி நீர் வரத்து மூலம் ஏரியின் இருப்பு 441 மில்லியன் கனஅடியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக 136 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 7 ஆயிரத்து 835 மில்லியன் கனஅடி (7.8 டி.எம்.சி.) நீர் இருந்தது. 13 ஆயிரத்து 222 மில்லியன் கனஅடி (13 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட அனைத்து ஏரிகளிலும் சேர்த்து தற்போது 9.1 டி.எம்.சி. இருப்பு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பெய்யும் மழை மூலம் கிடைக்கும் நீரை சேமிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும். அதேநேரம் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நிலைமையும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்