ரூ.85,984 கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி
மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு ரூ.85,984 கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கப்பட்டது.;
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவிற்கு பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே. ஜோதி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் கே.ஜி. சரவணன், என். தியாகராஜன், எம். ரேணு எம். முனுசாமி, எம். செல்வம், எல். ராஜா, எம். தனசீலா, கே. குப்புசாமி, கே. அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பி. சம்பத் வரவேற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி. பி. முருகேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூட்டுறவு கடன் சங்க செயல்பாடுகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் சங்க நிர்வாகிகளிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதி 51 ஆயிரத்து 590 ரூபாயும், கூட்டுறவு கல்வி நிதியாக 34 ஆயிரத்து 393 ரூபாய் என மொத்தம் 85 ஆயிரத்து 984 ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது.