255 ஆசிரியர்களுக்கு 8,500 பனை விதைகள்
255 ஆசிரியர்களுக்கு 8,500 பனை விதைகள்;
கோவை38
பள்ளி கல்வித்துறை சார்பில் கோவை மாவட்டம் முழுவதும் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பனை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் கலந்து கொண்டு மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பனை விதைகளை மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாநகராட்சி கல்வி அலுவலர் மரிய செல்வம், பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பள்ளி கல்வித்துறையின் மூலம் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் முதற்கட்டமாக சேலம் மாவட்டத்தில் இருந்து 11 ஆயிரம் பனை விதைகள் கோவைக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இதில் 8,500 விதைகள் இன்று (நேற்று) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு பையில் பனைவிதைகள் வைக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.