சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்று இருப்பதாகவும், தேங்கும் தண்ணீரை அகற்ற 791 இடங்களில் பம்பு செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம், வார்டு 52 மற்றும் 53 போஜராஜன்நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரெயில்வே சந்திக்கடவு 11-ஏ-ல் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.20 கோடி செலவில் 207 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் இந்த பாதை அமைக்கப்படுகிறது.
இதில் 37 மீட்டர் நீளத்துக்கு ரெயில்வே நிர்வாகத்தாலும், 170 மீட்டர் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பிலும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. 37 மீட்டர் நீளத்துக்கான பணியை மேற்கொள்ள மாநகராட்சியின் மூலதன நிதியில் இருந்து ரூ.6 கோடியே 60 லட்சம் ரெயில்வே நிர்வாகத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு, பணிகள் முடிவுற்றுள்ளது.
அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்
அதனைத்தொடர்ந்து மீதமுள்ள 170 மீட்டர் நீளத்துக்கான அணுகு சாலை பணிக்கு சென்னை மாநகராட்சியின் மூலதன மானிய நிதியின்கீழ் ரூ.13 கோடியே 40 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, திட்ட பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கிவைத்தனர்.
இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி., ஐட்ரீம் ஆர்.மூர்த்தி எம்.எல்.ஏ., மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, நகரமைப்புக் குழு தலைவர் இளைய அருணா, துணை ஆணையர்கள் எம்.எஸ்.பிரசாந்த், எம்.சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
791 இடங்களில் பம்பு செட்
நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த சுரங்கப்பாதை அமைக்கும் பணி 18 மாதங்களில் முடிக்க திட்டமிட்டு பணிகள் தொடங்கி நடைபெற உள்ளது. 33 ஆண்டுகள் கழித்து இதற்கான பணிகள் நடக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தேங்கும் மழைநீரை அகற்றுவதற்காக சம்பந்தப்பட்ட இடங்கள் அடையாளம் காணப்பட்டு, 791 இடங்களில் பம்பு செட்டுகள் அமைத்து இருக்கிறோம்.
எந்த நிலையில் தண்ணீர் தேங்கினாலும், அதனை உடனடியாக அகற்றுவதற்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வடிகால் பணிகளை பொறுத்தவரையில், ஒவ்வொரு தெருவிலும் மெட்ரோ, டெலிபோன், மின்சாரம் இணைப்புகள் செல்கின்றன. இதனை கருத்தில்கொண்டு பணிகள் நடைபெறுவதால், ஆங்காங்கே கிடப்பில் இருக்கின்றன.
80 சதவீதம் நிறைவு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வடிகால் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்களை அப்படியே விட்டுவிடக்கூடாது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, பணி நடைபெறும் இடங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றுவிட்டது. மீதமுள்ள பணிகளும் சீக்கிரம் முடிக்கப்பட்டுவிடும். இன்னும் 3 மாதங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, எல்லாவற்றையும் சரிசெய்துவிடுவோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் சில இடங்களில் விரைந்து செயல்படுத்தப்பட்டன. ஆனால் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ள தொழில்நுட்பம் அதிகம் தேவைப்படுகிறது. தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.