லாரியில் கடத்தப்பட்ட 781 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

லாரியில் கடத்தப்பட்ட 781 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-01-05 20:53 GMT

முசிறி:

புகையிலை பொருட்கள்

திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்த காமாட்சிபட்டியில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாநிதி, சக்தி விநாயகம், போலீஸ் காரர்கள் ராஜேஷ், சக்திவேல் ஆகியோர் ரோந்து சென்றனர்.

அப்போது காமாட்சிபட்டியில் உள்ள சேகர் என்பவரது வீட்டின் அருகே கன்டெய்னர் லாரியில் இருந்து மூட்டைகளை இறக்கி, சரக்கு வேனில் ஏற்றப்படுவதை கண்ட போலீசார், அந்த மூட்டைகளை சோதனை செய்தனர். அப்போது அந்த மூட்டைகளில் புகையிலை பொருட்கள் சுமார் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

லாரியில் கடத்தல்

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மராட்டிய மாநிலம் பூனாவில் இருந்து தஞ்சாவூருக்கு குழாய் லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் விராலிமலை தெற்கு தெருவை சேர்ந்த அழகர் மகன் வெள்ளைச்சாமி (வயது 23), கிளீனர் விராலிமலை அசுரபட்டியை சேர்ந்த வேலு மகன் சீனிவாசன்(25) என்பதும், இவர்கள் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ெதாடர்ந்து கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் உள்ளூர் விற்பனைக்காக அந்த லாரியில் இருந்த புகையிலை பொருட்கள் அடங்கிய மூட்டைகளை சரக்கு வேனில் ஏற்றியதும், அந்த வேனின் டிரைவர் சூரம்பட்டி செல்லிபாளையத்தை சேர்ந்த சோழனின் மகன் திவாகர்(23) என்பதும் தெரியவந்தது.

3 பேர் கைது

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, மொத்தம் 781 கிலோ புகையிலை பொருட்கள், லாரி, சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்றது யார்? காமாட்சிபட்டியில் இருந்து புகையிலை பொருட்களை வாங்கியவர்கள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்