குரூப்-4 தேர்வை 78 ஆயிரத்து 18 பேர் எழுதினர்

குரூப்-4 தேர்வை 78 ஆயிரத்து 18 பேர் எழுதினர்.;

Update: 2022-07-24 20:13 GMT

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-4 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 320 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வை கண்காணிக்க 12 பறக்கும்படை அலுவலர்களும், 93 இயங்குக்குழுக்களும் நியமிக்கப்பட்டு இருந்தன. அனைத்து மையங்களில் நடந்த தேர்வுகளும் வீடியோ ேகமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. நேற்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி 12.30 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் காலை 9 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த தேர்வை 78 ஆயிரத்து 18 பேர் எழுதினார்கள். இது 83.37 சதவீதமாகும். தேர்வு மையங்களின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு மையத்துக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாத தால் அவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

கலெக்டர் ஆய்வு

திருச்சி கண்டோன்மெண்ட் வெஸ்ட்ரி பள்ளியில் தேர்வு எழுத வந்த மணப்பாறையை சேர்ந்த சரஸ்வதி என்ற மாற்றுத்திறனாளி பெண், சக்கர நாற்காலி இல்லாததால் அவர் தேர்வு மையத்துக்கு செல்ல சிரமப்பட்டார். இதைக்கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலா மற்றும் பெண் போலீஸ் இணைந்து அந்த பெண்ணை தூக்கிச்சென்று தேர்வு மையத்தில் இறக்கி விட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் நடந்த தேர்வை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பல்வேறு மையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பார்வையற்ற தேர்வர்கள் உதவியாளர்கள் உதவியுடன் தேர்வு எழுதியதையும் கலெக்டர் ஆய்வு செய்தார். லால்குடியில் தேர்வு மையத்தை கோட்டாட்சியர் வைத்திநாதன், தாசில்தார் சிஸிலினா சுகந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்