'நீட்' தேர்வு
பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட படிப்புகளுக்கு 'நீட்' என்னும் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு 'நீட்' தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. இதன்படி திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 'நீட்' தேர்வுக்கு 7,799 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்திருந்தனர்.
சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி, ஜெ.ஜெ. என்ஜினீயரிங் கல்லூரி, பொன்மலை கேந்திரவித்யாலயா பள்ளி, காஜாநகர் சமதுபள்ளி உள்பட மொத்தம் 12 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. தேர்வு மையத்துக்கு காலை 10 மணி முதலே மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினர். காலை 11 மணி முதல் ஹால்டிக்கெட்டுடன் வந்த மாணவ-மாணவிகளை கடும் சோதனை செய்து தேர்வறைக்குள் அனுப்பினர்.
169 பேர் வரவில்லை
வளையல், சங்கிலி, கொலுசு உள்ளிட்ட அணிகலன்களை அணிந்து வந்த மாணவிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தேர்வுக்கு வந்த மாணவிகள் அவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர். முன்னதாக தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக மாணவ-மாணவிகள் பலர் அவசர, அவசரமாக பாடங்களை படித்து கொண்டே இருந்தனர்.
பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடந்தது. மாணவர்கள் தேர்வு எழுதுவதை வீடியோவாகவும் பதிவு செய்தனர். மேலும், ஒவ்வொரு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 'நீட்' தேர்வை 7,630 பேர் எழுதினர். 169 பேர் தேர்வுக்கு வரவில்லை.