ஜல்லிக்கட்டில் 750 காளைகள் சீறிப்பாய்ந்தன

ஜல்லிக்கட்டில் 750 காளைகள் சீறிப்பாய்ந்தன.

Update: 2023-03-06 20:25 GMT

அன்னவாசல்:

ஜல்லிக்கட்டு

அன்னவாசலில் தர்மசம்வர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர் கோவில் மாசிமக தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, கரூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 750 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை 132 மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

இதில் சில காளைகள், மாடுபிடி வீரர்களை அருகில் கூட நெருங்க விடவில்லை. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கின. பல காளைகள் களத்தில் நின்று விளையாடின. காளையர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, வெள்ளிக்காசுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது

35 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் போலீஸ்காரர் மாசிலாமணி(வயது 32), குமார்(21), ரெத்தினம்(36), போஸ்(21), மதன்குமார்(21), தனுஸ்(25), சிவா(28) உள்பட 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர்களில் படுகாயமடைந்த பழனி(30), சுப்பிரமணி(69), முருகேசன்(28) உள்பட 10 பேர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.

நிபந்தனைகளின்படி முறையாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறதா என்பதை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் கண்காணித்தார். இலுப்பூர் துணை சூப்பிரண்டு காயத்திரி தலைமையில் அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்ட 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தரமற்ற உணவால் அரசு அலுவலர்கள் வேதனை

ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியில் மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் காலை முதலே பணியில் ஈடுபடுவது வழக்கம். அவர்களுக்கு விழா கமிட்டியாளர்கள் சார்பில் காலை டிபன், மதிய உணவு வழங்கப்படும். இந்தநிலையில் இந்த ஜல்லிக்கட்டின்போது பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்களுக்கு காலை மற்றும் மதியம் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததால், அவர்கள் சாப்பிட முடியாமல் சிரமத்துக்கு உள்ளானதாக அதிகாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பின்னர் அவர்களுக்கு அன்னவாசல் காவல்துறை, சுகாதாரத்துறை சார்பில் டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது.

கதவில் கை சிக்கி பெண் சப்-இன்ஸ்பெக்டர் காயம்

ஜல்லிக்கட்டையொட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த அவசர வழியில் உள்ள இரும்பு கதவுக்குள் அவரது கை சிக்கியதில், அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்