மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74¼ கோடி கடனுதவி

1,058 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவி ஆணையை வேலூர் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.;

Update: 2022-12-29 16:40 GMT

கடனுதவி வழங்கும் விழா

தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,058 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா காட்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாபு, மாநகராட்சி மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் செந்தில்குமரன் வரவேற்றார்.

ரூ.74 கோடியே 25 லட்சம்

இதில், 1,041 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.70 கோடியே 17 லட்சம், 7 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.3 கோடியே 83 லட்சம், சமுதாய முதலீட்டு நிதி சார்பில் 4 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2 லட்சம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 50 ஆயிரம் என்று மொத்தம் 1,058 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.74 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவிக்கான ஆணைகளை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன் ஆகியோர் வழங்கினர்.விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவிகலெக்டர் பூங்கொடி, மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் வேல்முருகன், சத்யானந்தன், அமுதா ஞானசேகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய நலத்திட்ட உதவிகள், கடனுதவி ஆணை மற்றும் சிறப்புரையை காணொலி காட்சி வழியாக வேலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்