காரில் 700 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

காங்கயம் அருகே காரில் 700 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியவரை திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-06-27 15:56 GMT

ரேஷன் அரிசி கடத்தல்

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் மாவட்டத்தின் எல்லைகள், ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் போலீசார் வெள்ளகோவில் சுற்றுப்புற பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காங்கயம்-முத்தூர் ரோடு நத்தக்காடையூர் பிரிவு அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காருக்குள் இருந்த மூட்டைகளை சோதனை செய்தபோது அது ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது. காரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் சிவகிரியை சேர்ந்த தங்கராஜ் (வயது 43) என்பதும், அவர் முத்தூரில் தங்கியிருந்து பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பின்னர் வடமாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.

14 மூட்டைகளில் இருந்த மொத்தம் 700 கிலோ ரேஷன் அரிசியையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தங்கராஜை திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்