இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்த மண்டபத்தில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.;
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து மண்டபம் கடலோர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் யாசர் மவுலானா உள்ளிட்ட போலீசார் கிழக்கு தெரு பகுதியில் உள்ள வீடு ஒன்றை சோதனை செய்தனர்.
அப்போது அங்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த சுமார் 70 கிலோ கடல் அட்டைகள் மற்றும் பதப்படுத்துவதற்கு தேவையான பாத்திரங்கள், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தப்பி ஓடிய மண்டபத்தை சேர்ந்த ஒருவரை தேடி வருகின்றனர்.
ரூ.14 லட்சம்
பறிமுதல் செய்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் இவற்றின் சர்வதேச மதிப்பு சுமார் 14 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் பொருட்களை கடலோர போலீசார் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.