ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
செங்குன்றம் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
செங்குன்றம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான குடியுரிமை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செங்குன்றத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் 7 டன் மதிப்பிலான ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக செங்குன்றத்தை சேர்ந்த பிரேம்குமார்(வயது 46) மற்றும் செல்வராஜ்(42) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்து பம்மதுகுளம் அருகே உள்ள நுகர்ப்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.