கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை தீர்த்துக்கட்டிய கணவர் உள்பட 7 பேர் சிறையில் அடைப்பு
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை தீர்த்துக்கட்டிய வழக்கில் கணவர் உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கூலிப்படையை ஏவி கொலை
பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 33), தனியார் டயர் தொழிற்சாலை ஊழியர். இவருடைய மனைவி பிரவீணா (26). இந்தநிலையில் ராஜ்குமார் கடந்த 22-ந்தேதி இரவு தனது மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:-
ராஜ்குமாருக்கும், பெரம்பலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இது தொடர்பாக புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கண்டுபிடித்து அழைத்து வந்து அறிவுரை கூறி அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆனாலும் ராஜ்குமார் தனது கள்ளக்காதலியை மறக்க முடியாமல் தவித்து வந்தார்.
தகாத உறவு
இந்த சூழ்நிலையில் அவர்கள் 2 பேரையும் கண்டித்த பிரவீணா தனது கணவர் ராஜ்குமாரை ஒரு நாள் இதற்காக செருப்பால் அடித்துள்ளார். இதனால் ராஜ்குமாரிடம் பழகுவதை அந்த பெண் நிறுத்தி விட்டு வேறோருவருடன் பழகி வந்துள்ளார். மேலும் ராஜ்குமார் தனது அண்ணனின் மனைவி ஆனந்தியுடன் (33) தகாத உறவு வைத்து இருப்பதாக பிரவீணா சந்தேகமடைந்தார். இதனால் ஆனந்தியையும் ஒரு நாள் பிரவீணா துடைப்பத்தால் அடித்துள்ளார். இதனால் ராஜ்குமார் தனது மனைவி பிரவீணாவை கொலை செய்ய திட்டம் திட்டினார். இதற்கு உதவிக்கு அவர் தனது அண்ணி ஆனந்தியையும் அழைத்துள்ளார்.
இதற்கு ஆனந்தி தனது அக்காள் மகனான திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வாசுகி தெருவை சேர்ந்த சுரேசின் மகன் தீபக் (19) ஏற்கனவே ஒரு கொலை செய்தவன். அதனால் ஆனந்தி அவனிடம் பிரவீணாவை கொலை செய்யும் திட்டத்தை கூறியுள்ளார். அதற்கு அவன் ரூ.2 லட்சம் கேட்டுள்ளான்.
முன்பணம்...
இதையடுத்து, கடந்த 19-ந்தேதி ராஜ்குமார் தனக்கு கிடைத்த கடன் தொகை ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரத்தை முன்பணமாக ஆனந்தியின் ஜி-பே கணக்கிற்கு அனுப்பி, பின்னர் அந்த பணத்தை பிரவீணாவை கொலை செய்ய முன்பணமாக தீபக் ஜி-பே கணக்கிற்கு அனுப்பினார். பணத்தை பெற்று கொண்ட தீபக் தனது நண்பர்களான ஆம்பூரை சேர்ந்தவர்களான சந்தோஷ் பாபு என்ற சஞ்சய் (19), சுரேசின் மகன் சரண்குமார் (19), அல்லாஹ் பக்சின் மகன் பப்லு (22) கர்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வந்த மூர்த்தி மகன் லக்கி என்ற லட்சன் (19) ஆகியோரை பிரவீணாவை கொலை செய்ய பெரம்பலூருக்கு அழைத்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று ராஜ்குமாருக்கு இரவு பணி என்பதால் மனைவி பிரவீணாவை எளம்பலூரில் இருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலையில் உள்ள சித்தப்பா வீட்டில் வசிக்கும் அக்காள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு விட அழைத்து சென்றார். அப்போது ஏற்கனவே ராஜ்குமார் திட்டமிட்டது போல் தீபக் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்தில் பிரவீணாவை கொலை செய்ய காரில் காத்து கொண்டிருந்தார். அப்போது ராஜ்குமார் பிரவீணாவுடன் மோட்டார் சைக்களில் சம்பவ இடம் அருகே வரும் போது 2 முறை ஹாரன் அடித்துள்ளார்.
கழுத்தறுத்து கொலை
இதையடுத்து தீபக் தனது நண்பர்களுடன் காரில் இருந்து இறங்கி மோட்டார் சைக்கிளை வழிமறித்து ராஜ்குமாரை பிடித்து வைத்து கொண்டு, பிரவீணாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்தனர். போலீசாருக்கு சந்தேகம் ஏற்படாமல் இருக்க பிரவீணாவின் ஒரு பவுன் தங்க தாலியையும், 1½ பவுன் தங்க சங்கிலியையும், கொலுசுகளையும் கூலிப்படையினர் திருடியதோடு, ராஜ்குமாரையும் கத்தியால் லேசாக கீறி விட்டு சென்றனர். ஆனால் ராஜ்குமார் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரவீணாவை கத்தியால் கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றதாகவும், அதனை தடுத்த தன்னையும் அந்த கும்பல் கத்தியால் கீறி விட்டு சென்றதில் காயமடைந்தாக மருத்துவமனையில் சேர்ந்து நாடகமாடியது தெரியவந்தது.
சிறையில் அடைப்பு
இந்த வழக்கில் கூலிப்படையினரை திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. பகலவன் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வழிக்காட்டுதலின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் மேற்பார்வையில், பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி தலைமையிலான தனிப்படையினர் வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில், தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்த தீபக், சஞ்சய், சரண்குமார், லட்சன், பப்லு ஆகிய 5 பேரை தனிப்படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மீதும், முக்கிய குற்றவாளிகளான ராஜ்குமார், ஆனந்தி ஆகியோர் மீதும் பெரம்பலூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் போலீசார் ஆனந்தியை திருச்சி மகளிர் சிறையிலும், மீதமுள்ளவர்களை திருச்சி மத்திய சிறையிலும் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணி புரிந்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்.
கணவரை கொன்று விடாதீர்கள் என்று கெஞ்சிய மனைவி
பிரவீணாவை கூலிப்படையினர் கழுத்தை அறுத்து கொலை செய்யும் போது கூட, அவர் தனது கணவர் ராஜ்குமாரை கொன்று விடாதீர்கள், அவரை விட்டு விடுங்கள் எனது நகைகளை கழற்றி தருகிறேன், எடுத்து செல்லுங்கள் என்று தங்களிடம் கெஞ்சியதாகவும், அப்போது ராஜ்குமார் ஒன்றும் தெரியாத போல் வேடிக்கை பார்த்ததாகவும் விசாரணையில் கூலிப்படையினர் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.