மர்மவிலங்கு கடித்துக்குதறியதில் 7 ஆடுகள் செத்தன
செஞ்சி அருகே மர்மவிலங்கு கடித்துக் குதறியதில் 7 ஆடுகள் செத்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி
செஞ்சி அருகே உள்ள வீரணாமூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தசாமி, வண்டிக்காரன். இவர்கள் ஆடுகள் வளர்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலை இவர்கள் இருவரும் வீட்டின் பின்புற வயல்வெளி பகுதியில் உள்ள ஆட்டுப்பட்டிகளில் தங்களுக்கு சொந்தமான ஆடுகளை அடைத்து வைத்திருந்தனர். நேற்று காலை 2 பட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் ரத்த காயங்களுடன் செத்துக்கிடந்தன. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த இருவரும் இதுபற்றி செஞ்சி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனக்காப்பாளர்கள் வெங்கடேசன், ராஜாராம், வனக்காவலர் ராஜேந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர் சபரிமலைநாதன் ஆகியோர் நேரில் சென்று செத்துக்கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவில் ஆட்டுப்பட்டிகளுக்குள் புகுந்த மர்மவிலங்கு கோவிந்தசாமிக்கு சொந்தமான 4 ஆடுகளையும், வண்டிக்காரனுக்கு சொந்தமான 3 ஆடுகளையும் கடித்துக் குதறியதில் செத்துக்கிடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆடுகள் உடற்கூராய்வு செய்து புதைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்தும் வனத்துறையினர். விசாரணை நடத்தி வருகிறார்கள்.