திருவாலங்காடு அருகே ரெயில்வே சிக்னல் வயர் திருட்டு - 7 பேர் கைது

திருவாலங்காடு அருகே ரெயில்வே சிக்னல் வயரை திருடிய 7 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-16 16:26 GMT

திருத்தணி,

சென்னை-அரக்கோணம் ரெயில் மார்க்கத்தில் திருவாலங்காடு ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையம் அடுத்த தொழுதாவூர் ரெயில்வே கேட் அருகே சிக்னலுக்கு பொருத்த காப்பர், அலுமினியம் கலந்த வயர் 2 ரோல்கள் வைக்கப்பட்டிருந்தது.

வயர் ரோல் இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கடந்த மாதம் ஒரு வயர் ரோலை திருடி பாதி வயரை தொழுதாவூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி சென்றனர்.

இந்த நிலையில் சிக்னல் வயர் திருடப்பட்டதை அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்தில் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது பாழடைந்த கிணற்றில் இருந்த 1 ரோல் வயரை ரெயில்வே போலீசார் மீட்டனர்.

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அரக்கோணம் கோட்ட உதவி ஆணையர் ஏ.கே.பிரித் தலைமையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் மதுசூதன ரெட்டி, பூமிநாதன் மற்றும் திருவள்ளூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் செபஸ்டின் தலைமையிலான போலீசார் 15 நாட்களாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இளவரசன் (வயது 18), விக்னேஷ்வரன்( 21), ஜீவா(38), சாரதி(22), தினேஷ்(19), முத்துகிருஷ்ணன்(37), சுபாஷ்(22) ஆகிய ஏழு பேரை நேற்று ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பிலான வயர் மற்றும் கம்பிகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 7 பேரையும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்