133 பேருக்கு ரூ.69½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
மாரசந்திரத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 133 பேருக்கு ரூ.69 லட்சத்து 45 ஆயிரத்து 702 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.;
குருபரப்பள்ளி:-
மாரசந்திரத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 133 பேருக்கு ரூ.69 லட்சத்து 45 ஆயிரத்து 702 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மாரசந்திரத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமையில் நடந்தது. இதில் அரசு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை பெறுவது எப்படி? என்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினர்.
முகாமில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசும் போது கூறியதாவது:-
திறன் மேம்பாட்டு பயிற்சிகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரு பகுதி தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகவும், மற்றொரு பகுதி மலை கிராமங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. மலை பகுதிகளில் 50 குடும்பங்கள் இருந்தாலே அந்த பகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான சாலை வசதிகள், போக்குவரத்து வசதிகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதே போல நமது மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தொழிற்சாலைகளில் பணியில் சேர்வதற்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சியினை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது தனித்திறமையை வளர்த்துக்கொண்டு தமிழக அரசு மூலம் நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு, பணி ஆணைகளை பெற்று பயனடைய வேண்டும்.
குழந்தை திருமணம்
குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். குழந்தை திருமணம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாரச்சந்திரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து 81 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 38 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 9 மனுக்கள் நிராகரிக்ப்பட்டுள்ள நிலையில் 34 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. மேலும 181 மனுக்கள் வந்துள்ளன. அதில் தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
முகாமில் 133 பேருக்கு ரூ.69 லட்சத்து 45 ஆயிரத்து 702 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினார். இதில் உதவி கலெக்டர் சதீஷ்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பாக்கியலட்சுமி, வேளாண்மை துறை இணை இயக்குனர் முகமது அஸ்லம், தோட்ட கலை துறை இணை இயக்குனர் பூபதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அய்யப்பன், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.