உழவர் சந்தைகளில் ரூ.68½ லட்சத்துக்குகாய்கறிகள் விற்பனை
ஆவணி மாத அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.68.46 லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை நடந்தது.;
காய்கறிகள் விற்பனை
சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம், எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் அதிகாலை முதலே காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வர். நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் காய்கறிகள் விற்பனை அமோகமாக நடந்தது.
குறிப்பாக சூரமங்கலம், அஸ்தம்பட்டி உழவர் சந்தைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள் மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்களை அதிகளவில் வாங்கி சென்றனர். குறிப்பாக அகத்தி கீரை, பூசணிக்காய், தேங்காய், வாழை இலை உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை நடந்தது. இதனால் உழவர் சந்தைகளில் வழக்கத்தைவிட நேற்று காய்கறிகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் 221.916 டன் காய்கறிகள் ரூ.68 லட்சத்து 46 ஆயிரத்திற்கு விற்பனை நடந்ததாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுமல்லி ரூ.600
இதேபோல், முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சேலம் வ.உ.சி.பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.600-க்கு விற்பனையானது.
இதேபோல், ஒரு கிலோ முல்லை ரூ.400-க்கும், ஜாதி மல்லி ரூ.260-க்கும், காக்கட்டான் ரூ.240-க்கும், செவ்வரளி ரூ.100-க்கும், சம்மங்கி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.