திருத்தணி அருகே 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திருத்தணி அருகே 650 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை உணவுப்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழை, எளிய மக்களுக்காக வழங்கப்படும் ரேஷன் அரிசி, பல்வேறு இடங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக அடிக்கடி வரும் புகார்களைத் தொடர்ந்து போலீஸ் துறையினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, எடுத்து செல்லப்பட்ட அரிசியை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் இருந்து ஆந்திராவிற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் மலர்விழிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தெருவில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை ஆய்வு செய்த போது அதில் 650 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவுப்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.