நீலகிரியில் 65 போக்சோ வழக்குகள் பதிவு
கடந்த ஆண்டில் நீலகிரியில் 65 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினார்கள்.
ஊட்டி
கடந்த ஆண்டில் நீலகிரியில் 65 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் கூறினார்கள்.
போக்சோ வழக்குகள்
நீலகிரி மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 123 குற்ற வழக்குகள் பதியப்பட்டு, அதில் 61 சதவீத வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பாக 65 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 15 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுத்தரப்பட்டது. இந்த குற்றங்களை குறைக்கும் வகையில், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் பழங்குடியின மக்களிடமும், மாணவ-மாணவிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்படி 1046 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
திறன் மேம்பாட்டு மையம்
இது தவிர மாவட்டத்தில் பதிவான 7 கொலை வழக்குகளில் 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். ஊட்டி, குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் போக்குவரத்து இடையூறை குறைக்க உதவும் வகையில், 9 இருசக்கர ரோந்து வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது. பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நெலாக்கோட்டை அருகே பொன்னாணி மற்றும் சோலூர்மட்டம் அருகே கரிக்கையூர் ஆகிய பகுதிகளில் பழங்குடியின பன்னாட்டு மையம் திறக்கப்பட்டது.
ஊட்டி பழைய போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு அப்துல் கலாம் திறன் மேம்பாட்டு மையமாக மாற்றப்பட்டது. அதில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக நூலகம், கணினி பயிற்சி, சைபர் பயிற்சி கூடம் மற்றும் தற்கொலை எண்ணங்களை நீக்கி விழிப்புணர்வு வழங்கும் வகையில் துளிர் மையம் ஆகியவை திறக்கப்பட்டன.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.