எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 64 பேர் காயம். பாய்ந்து ஓடிய காளை கிணற்றில் விழுந்தது

பேரணாம்பட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் நடந்த எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 64 பேர் காயம் அடைந்தனர். பாய்ந்து ஓடிய காளை ஒன்று கிணற்றில் விழுந்தது.

Update: 2023-01-19 16:19 GMT

எருது விடும் விழா

பேரணாம்பட்டு அருகே உள்ள ஏரி குத்தி கிராமத்தில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் வரை எருது விடும் விழா நடந்தது. விழாவிற்கு சப்-கலெக்டர் வெங்கட்ராமன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன் முன்னிலை வகித்தார். பேரணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, பூங்குளம், நரியம்பட்டு உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து 142 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. பங்கேற்றன. இவற்றில் 123 காளைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. லத்தேரி பாபு என்பவரது காளைக்கு முதல்பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது. இரண்டாவது பரிாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.65 ஆயிரம் பேரணாம்பட்டு ஜோசப் என்பவரது காளைகளுக்கும் வழங்கப்பட்டது.

மேலும் போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அமலு விஜயன் எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி, மண்டல துணை தாசில்தார் பலராமன், பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் ஜனார்த்தனன், டேவிட், நகராட்சி துணை தலைவர் ஆலியார் ஜூ பேர் அஹம்மத் உள்பட பலர் பங்கேற்றனர்.

சீறிப் பாய்ந்து ஓடியதில் 8 காளைகளுக்கு காயம் ஏற்பட்டது. மாடுகள் முட்டியதில் 29 பேர் காயமடைந்தனர்.

ஒடுகத்தூர்

அணைக்கட்டு தாலுகா பாக்கம் பாளையம், சேர்பாடி ஆகிய பகுதிகளில் காளை விடும் விழா நேற்று நடந்தது. அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மற்றும் திருப்பத்தூர், குடியாத்தம், பலமநேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 175 காளைகள் பங்கேற்றன. காலை 6 மணி முதல் காளைகளுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒடுகத்தூர் கால்நடை மருத்துவர், காளைகளை பரிசோதனை செய்து அனுமதி வழங்கினார்.

9 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது மாடுகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர்.

வேப்பங்குப்பம் மற்றும் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன், உலகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போட்டிகளை கண்காணித்தினர். விழா ஏற்பாடுகளை கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

சேர்பாடி

அதேபோல் சேர்பாடி கிராமத்தில் காளை விடும் விழாவுக்கு தாசில்தார், ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். இதில் 225 காளைகள் கலந்து கொண்டன. கண்ணமங்கலத்தில் இருந்து வந்து கலந்துகொண்ட ஒருகாளை இலக்கை அடைந்த பிறகும் நிற்காமல் ஓடி அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி அந்த காளையை மீட்டனர். காளைகள் முட்டியதில் 19 பேர் காயம் அடைந்தனர்.

3 இடங்களிலும் நடந்த எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 64 பேர் காயமடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்