ரெயில், பஸ் நிலையங்களில் சுற்றித்திரிந்த 64 பேர் காப்பகத்தில் சேர்ப்பு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரெயில், பஸ் நிலையங்களில் சுற்றித்திரிந்த 64 பேர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.;
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரெயில், பஸ் நிலையங்களில் சுற்றித்திரிந்த 64 பேர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
உணவின்றி தவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் ரெயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் முதியவர்கள், மனநலம் பாதித்தவர்கள் சுற்றி திரிகின்றனர். இவர்களில் சிலர் குடும்பத்தினர் ஒதுக்கியதால் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் ஆவர்.
கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம் பலருக்கு மதிய உணவாக இருக்கிறது. அதேபோல் தன்னார்வலர்களும் உணவு வழங்குகின்றனர். மேலும் பெரும்பாலானோர் பகலில் பொதுமக்களிடம் யாசகம் பெற்று வாழ்கின்றனர். எனினும் இரவில் உணவின்றி வெறும் வயிற்றுடன் தவிப்பவர்களும் உள்ளனர்.
சாலையோரத்தில் தஞ்சம்
இதேபோல் சிலர் இரவில் தூங்குவதற்கு இடமின்றி தவிக்கின்றனர். இதனால் பஸ், ரெயில் நிலையங்கள், மேம்பாலங்களின் கீழ் பகுதிகள், சாலை ஓரத்தில் தஞ்சம் அடைகின்றனர். இரவில் கடும் பனிப்பொழிவை பொருட்படுத்தாமல் திறந்தவெளியில் தூங்குகின்றனர்.
எனவே ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரியும் முதியவர்களை மீட்டு, காப்பகங்களில் சேர்க்க போலீசார், சமூக நலத்துறையினர் இணைந்து நேற்று நடவடிக்கையில் இறங்கினர்.
64 பேர் மீட்பு
அதன்படி போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், சமூக நலத்துறை அலுவலர் புஷ்பகலா ஆகியோரின் உத்தரவின்பேரில் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் நேற்று மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திண்டுக்கல், பழனி உள்பட மாவட்டம் முழுவதும் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் உள்பட சாலைகளில் சுற்றித்திரிந்த பெண்கள், முதியவர்கள், ஆதரவற்றோரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 64 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதேபோல் அடிக்கடி சோதனை நடத்தி சாலையில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்கள், முதியவர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.