61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு: உற்சாகமாக கடலுக்கு சென்ற புதுக்கோட்டை மீனவர்கள்
61 நாள் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததால் புதுக்கோட்டை மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மீன்பிடிக்க தடை
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி தமிழக அரசு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீனவர்கள் விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதேபோல் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கரையில் வரிசையாக நிறுத்தி வைத்தனர்.
வலைகள் புதுப்பிப்பு
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் ஏற்றி படகில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும், மீன்பிடிக்க தேவையான வலைகள் மற்றும் இதர சாதனங்களை புதுப்பித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. இதற்கிடையே கடந்த 14-ந் தேதி மீன்பிடி தடைக்காலமும் நிறைவடைந்தது.
புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் சனி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். வியாழக்கிழமை மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டு கரை திரும்பும் நாள் என்பதால் கடந்த 15-ந் தேதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
கடலுக்கு சென்றனர்
இதையடுத்து, புதுக்கோட்டை மீனவர்கள் மீன்பிடிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வந்தனர். நேற்று காலை மீனவர்கள் தங்கள் படகுகளில் ஐஸ், டீசல் மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கடலுக்குள் உற்சாகமாக சென்றனர். 61 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால் மீன்பிடி துறைமுகங்கள் விழாக்கோலம் பூண்டது.
மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்புவார்கள்.