வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை திருட்டு
வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை திருடப்பட்டது.;
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட சேர்க்காடு செங்கழுநீர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சம்பத், இவரது மனைவி செல்வி. இருவரும் லுங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பக்கத்து தெருவில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றனர்.
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு விட்டு சம்பத்தும், அவரது மனைவி செல்வியும் வீட்டுக்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்து 60 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜூலியஸ் சீசர், வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் எம்.ஜி.நகரில் உள்ள அண்ணா தெருவை சேர்ந்தவர் ஏசுரத்தினம் (வயது 63), இவர் கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்தினருடன் ஆந்திர மாநிலத்துக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 17 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ஏசுரத்தினம் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சந்தேகப்படும் நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.