குடோன் தீப்பற்றியதில் 60 மூட்டை சின்ன வெங்காயம் எரிந்து நாசம்
குடோன் தீப்பற்றியதில் 60 மூட்டை சின்ன வெங்காயம் எரிந்து நாசமானது.;
தீப்பற்றி எரிந்தது
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தில் ஏற்கனவே வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட வழக்கில் 34 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் அந்தப்பகுதியில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லாடபுரம் 1-வது வார்டு பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி(வயது 45). விவசாயியான இவருக்கு சொந்தமான கீற்று கொட்டகையினாலான சின்ன வெங்காய குடோன் (சேமிப்பு கிடங்கு) பஸ் நிறுத்தம் அருகே வாடகை இடத்தில் இருந்தது.
தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
அந்த குடோன் நேற்று அதிகாலை திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் குடோன் முற்றிலும் எரிந்து நாசமாகி விட்டது.
அந்த குடோனுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். குடோன் அருகே நிறுத்தப்பட்டுள்ள டிராக்டர்களையும் தீயிட்டு கொளுத்த, அவற்றின் மீது மண்எண்ணெய் ஊற்றப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.
சின்ன வெங்காயம் எரிந்து நாசம்
குடோனில் ஒரு மூட்டைக்கு 60 கிலோ என்ற அளவில் 60 மூட்டைகளில் இருந்த அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயமும், 2 தராசுகள், 100 காலி சாக்குகள் ஆகியவையும் முற்றிலும் எரிந்து தீக்கிரையாகின. எரிந்த சின்ன வெங்காயத்தின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று தெரிகிறது.
குடோனுக்கு மின் இணைப்பு கிடையாது என்பதால் மர்மநபர்கள் யாரோ குடோனுக்கு தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.