திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுபாளையம் ஊராட்சி பெட்டிக்கடை பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வராஜ் (வயது32). இவர் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்று இருந்த நிலையில் விஷ்வராஜ் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார்.
மாலை வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து விஷ்வராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த கண்ணனை (38) சில மாதங்களுக்கு முன்பு ஊத்துக்குளி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கு ஊத்துக்குளியில் செயல்படும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தரணிதார், நகையை திருடிய கண்ணனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். கண்ணன் மீது திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்ட போலீஸ் நிலையங்களில் 15 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.