அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதல்; முன்னாள் ராணுவ வீரர் பலி

திருச்சி அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.;

Update: 2023-07-31 19:15 GMT

திருச்சி அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார்.

முன்னாள் ராணுவ வீரர்

சமயபுரம் அருகே உள்ள போக்குவரத்து நகரை சேர்ந்தவர் கஜராஜலு (வயது 70). முன்னாள் ராணுவ வீரரான இவர் தனது வீட்டிற்கு அருகில் குடியிருக்கும் கார்த்திகேயன் (35) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்தார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் ெரயில்வே மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்றுக்கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி அதே திசையில் வேளாண் கல்லூரி அதிகாரி சென்ற அரசு வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கஜராஜலு பலத்த காயமடைந்தார். அப்போது, அதே வழியில் வந்த தனியார் பள்ளி பஸ்சை ஓட்டி வந்த அதன் டிரைவர் விபத்தை ஏற்படுத்திய கார் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது, பின்னால் வந்த கார்கள், லாரிகள் என அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது.

சாவு

இந்த சம்பவத்தினால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. விபத்துகள் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த கஜராஜலுவை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.

தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்திய போலீசார் பின்னர் போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்