போலீசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் திருவையாறு கோர்ட்டில் சரண்

போலீசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் திருவையாறு கோர்ட்டில் சரண்;

Update: 2022-09-09 19:30 GMT

திருவையாறு

நாச்சியார்கோவிலை சேர்ந்த வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 6 பேர் திருவையாறு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

நாச்சியார்கோவிலை சேர்ந்த வக்கீல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 37). இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 7-ந் தேதி சாமிநாதனின் தங்கை திருமணம் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள அணைக்குடம் கிராமத்தில் நடந்தது. இந்த திருமணத்தில் வக்கீல் சாமிநாதன் கலந்து கொண்டார்.

சரமாரி வெட்டிக்கொலை

பின்னர் திருமண மண்டபத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு டீக்கடையின் அருகில் நின்று கொண்டு தனது செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் சாமிநாதனை தாங்கள் வைத்து இருந்த பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

6 பேர் கோர்ட்டில் சரண்

இந்த கொலை வழக்கு தொடர்பாக தா.பழூர் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருநறையூர் அய்யம்பிள்ளை தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குருமூர்த்தி(21), செல்வம் மகன் கரண்(33), நாச்சியார்கோவில் மேலத்தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் தினேஷ்குமார்(23), கும்பகோணம் உள்ளிக்கான் சந்து பகுதியை சேர்ந்த முகமதுரபிக் மகன் தமீம் அன்சாரி(35), நாச்சியார்கோவில் ராமநாதன் நகரை சேர்ந்த பிரபு மகன் தினேஷ்குமார்(27), அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் விஜய்(20) ஆகிய 6 பேர் திருவையாறு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

சிறையில் அடைப்பு

சரண் அடைந்த 6 பேரையும் வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹரிராம் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் அனைவரையும் புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்