வனவிலங்குகளை வேட்டையாட வந்த 6 பேருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்
பெரம்பலூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வந்த 6 பேருக்கு வனத்துறையினர் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர்.;
வனத்துறையினர் ரோந்து
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில் வனத்துறையினர் சுழற்சி முறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனி குமரன் தலைமையில் வனவர் பிரதீப் குமார் மற்றும் வனக்காப்பாளர் மணிகண்டன் மற்றும் அன்பரசு ஆகியோர் கொண்ட வனக்குழுவினர் செட்டிகுளம் அடுத்த மாவிலங்கை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே 3 மோட்டார் சைக்கிள்களில் 6 வாலிபர்கள் வேட்டை நாய்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்று கொண்டிருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
ரூ.90 ஆயிரம் அபராதம்
இதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் கண்ணபாடியை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்பவரது தலைமையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த கீர்த்திவாசன், ரகுராம் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் 3 வேட்டை நாய்கள் மற்றும் டார்ச் லைட்டுகள் எடுத்துக் கொண்டு வனவிலங்குகளை வேட்டையாட வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு வனத்துறையினர் ரூ.90 ஆயிரத்தை அபராதமாக விதித்து வசூலித்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாட வரமாட்டோம் என்று அந்த இளைஞர்களிடம் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி வாங்கி கொண்டு அவர்களை எச்சரித்து வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.