3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
வாலிபர் கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
வாலிபர் கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிணற்றில் வீச்சு
விருதுநகர் அருகே உள்ள ஓ.கோவில்பட்டி ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ஆத்தியப்பன் (வயது 33). கடந்த 26-ந் தேதி அவரது உடல் ஓ.கோவில்பட்டி அருகே உள்ள கட்டனார்பட்டியில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் கத்தி குத்து காயங்களுடன் சாக்கு மூடையில் கட்டப்பட்டு வீசப்பட்டிருந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த வச்சகாரப்பட்டி போலீசார் உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவா்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
மது அருந்தினர்
தனிப்படை போலீசார் ஓ.கோவில்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஆத்தியப்பனின் தெருவில் வசிக்கும் மாரீஸ்வரன் (வயது 24), அவரது சகோதரர் காளீஸ்வரன் என்ற ஜெகதீசன் (19), மேட்டுப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் (19) மற்றும் 3 சிறுவர்களுக்கு கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ஆத்தியப்பன் மேற்படி 6 பேருடன் சேர்ந்து போதை பொருட்களை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று மது அருந்தி கொண்டிருந்த போது ஆத்தியப்பன், மாரீஸ்வரனின் தந்தையை தான் குத்தி கொலை செய்ததாக போதையில் கூறியுள்ளார்.
6 பேர் கைது
மாரீஸ்வரனின் தந்தை கடந்த 2012-ம் ஆண்டு மின்னல் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது. ஆத்தியப்பனின் உளறல் வாக்குமூலம் மாரீஸ்வரன், அவரது சகோதரர் காளீஸ்வரன் ஆகியோருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்திய நிலையில் கடந்த 25-ந் தேதி மேற்படி 6 பேரும் ஆத்தியப்பனை குளிப்பதற்காக கிணற்றுக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து கத்தியால் குத்தி உடலை சாக்கு மூடையில் கட்டி கிணற்றுக்குள் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 3 கத்திகள் மற்றும் ஒரு அரிவாளை புல்லலக்கோட்டை ரோட்டில் உள்ள ஒரு கிணற்றில் வீசியதாக போலீசில் சிக்கியவர்கள் கூறியதன் பேரில் போலீசார் அவற்றை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து மேற்படி ஆறு பேரையும் கைது செய்த வச்சகாரப்பட்டி போலீசார் அவர்களை காவலுக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஐ.டி.ஐ. மாணவர் என கூறப்படுகிறது.
போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
போலீசார் துரிதமாக செயல்பட்டு கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ள நிலையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் பாராட்டினார்.