6 பேருக்கு டெங்கு காய்ச்சல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பற்றாக்குறை காரணமாக குடிநீரை அதிகம் மக்கள் சேமிப்பதால் அதில் டெங்கு கொசுக்கள் பெருகி வருகின்றன. இதன்காரணமாக மாவட்டத்தில் 6 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.;

Update:2023-10-18 00:03 IST

ராமநாதபுரம், .

ெடங்கு காய்ச்சல் அதிகரிப்பு

தமிழகத்தில் மர்ம காய்ச்சல் அதிகமாக பரவி வருவதுடன் டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் மர்ம காய்ச்சலும் டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வந்த வண்ணம் உள்ளன. பொதுவாக மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில் லேசான மழை பெய்ததால் அதில் எவ்வாறு டெங்கு கொசுக்கள் பெருகி காய்ச்சலை பரப்பி வருகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், அந்தளவிற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசுக்கள் பெருகி காய்ச்சலை உருவாக்கி வருகின்றன.

மாவட்டம் முழுவதும் மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏராளமானோருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளை தேடி சென்ற வண்ணம் உள்ளனர்.

தண்ணீர் தேங்காமல் பார்க்க அறிவுரை

இதுகுறித்து ராமநாதபுரம் சுகாதார துணை இயக்குனர் டாக்டர் அர்ஜூன்குமார் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிணறுகள், தண்ணீர் தொட்டி போன்றவற்றில் கொசுப்புழு ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலுக்கு காரணமான ஏ.டி.ஸ். கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.

மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் தேவை கருதி அதிகளவில் குடிநீரை சேமித்து வைப்பதால் அதில் கொசுக்கள் பெருகி காய்ச்சலை உருவாக்கி வருகிறது.

6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

மாவட்டத்தில் தற்போதைய நிலையில் டெங்கு அறிகுறிகளுடன் 6 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் காரணமாக யாராவது வந்தால் அவர்கள் விவரம் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல காய்ச்சலுக்கு கார்டு பரிசோதனை மேற்கொள்ளாமல் விரிவான ரத்த பகுப்பாய்வு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்கள் பெறப்பட்டு அவர்களின் பகுதிகளில் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்