தனியார் தங்கும் விடுதியில் 12 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் கைது

வேடசந்தூரில் தனியார் தங்கும் விடுதியில் 12 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-23 03:00 IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு துர்காதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், தனிப்படை போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு தனியார் தங்கும் விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது தங்கும் விடுதியின் ஒரு அறையில் சந்தேகப்படும் வகையில் 6 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை வண்டியூரை சேர்ந்த நடேஷ்குமார் (வயது 23), திருமங்கலத்தை சேர்ந்த ரோகன் (26), சோழவந்தானை சேர்ந்த பிரபு (30), வத்தலக்குண்டுவை சேர்ந்த சின்னச்சாமி (46) என்பதும், கஞ்சாவை மொத்தமாக கொண்டு வந்து, வேடசந்தூர், எரியோடு பகுதிகளில் உள்ள கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சாவை விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் 2 பேர் எரியோடு பாகாநத்தம் புதூரை சேர்ந்த வேல்முருகன் (34), எரியோடு ஜங்கால்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் (39) என்பதும், கஞ்சாவை வாங்க வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்