நாவலூரில் கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில் மேலும் 6 பேர் கைது
கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கள்ளநோட்டு
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் லோகநாதன். கள்ளநோட்டு வைத்திருந்த வழக்கில் தாழம்பூர் போலீசார் அவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் உத்தண்டி பகுதியை சேர்ந்த எபினேசர்(43) என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் 6 பேர்
இந்த சம்பவத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளதை அறிந்த தாழம்பூர் போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டதின் பேரில் கள்ளநோட்டு வழக்கில் தொடர்புடைய செங்கல்பட்டு திம்மாவாரத்தைச் சேர்ந்த ஜெயகாந்த் (47), பட்டாபிராமை சேர்ந்த பிரசாந்த் குமார் (34), திருச்சியை சேர்ந்த பிரவீன் குமார் (33), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த எட்வர்ட் ஆரோக்கியஜெனர் (28), திருச்சியை சேர்ந்த செந்தில் (40), வில்லிவாக்கத்தை சேர்ந்த சரவணன் (41) ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய காகிதம், லேப்டாப், பிரிண்டர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்த தாழம்பூர் போலீசார் அனைவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோர்ட்டு காவலில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்த தனிப்படையினரை தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பாராட்டினார்.