6 வணிக மின் இணைப்புகள் துண்டிப்பு

சுல்தான்பேட்டையில் பி.ஏ.பி. கால்வாய் கரையோரம் உள்ள 6 வணிக மின் இணைப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் துண்டித்தனர்.;

Update: 2023-10-21 20:45 GMT
சுல்தான்பேட்டையில் பி.ஏ.பி. கால்வாய் கரையோரம் உள்ள 6 வணிக மின் இணைப்புகளை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் அதிகாரிகள் துண்டித்தனர்.


ஐகோர்ட்டு உத்தரவு


பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பி.ஏ.பி. கால்வாயில் இருந்து 300 மீட்டர் தொலைவு வரை உள்ள ஆழ்துளை கிணறு மூலம் வணிக பயன்பாடு மற்றும் விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் எடுக்க கொடுக்கப்பட்டு உள்ள மின் இணைப்பை துண்டிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.


இதையடுத்து பி.ஏ.பி. கூட்டு நடவடிக்கை குழு தலைவரும், கோவை தெற்கு ஆர்.டி.ஓ.வுமான பண்டரிநாதன் அறிவுறுத்தலின்பேரில் நேற்று சுல்தான்பேட்டை ஒன்றியம் மலைப்பாளையம், பச்சார்பாளையம், வதம்பச்சேரி கிராமங்களில் மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


6 இணைப்புகள்


அங்கு பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்குள் உள்ள ஆழ்துளை கிணறு மூலம் வணிக பயன்பாட்டுக்கு தண்ணீர் எடுக்க கொடுக்கப்பட்டு இருந்த 6 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.


இந்த நடவடிக்கையை சூலூர் துணை தாசில்தார் மணிகண்டன், மின்வாரிய அதிகாரி பாலமுரளி, பொதுப்பணித்துறை அலுவலர் ஆனந்த் பால தண்டபாணி ஆகியோர் சுல்தான்பேட்டை போலீசார் பாதுகாப்புடன் மேற்கொண்டனர்.


இதில் பச்சார்பாளையத்தில் சத்தியவதி புவனேஸ்வரன், சுந்தரசாமி வெள்ளிங்கிரி, மலைபாளையத்தில் குழந்தைசாமி, சத்திய பிரியா, ஹரிசி குமார், வதம்பச்சேரியில் நளினி ஆகிய 6 பேரின் நிலத்துக்கு வழங்கிய மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்