நெய்தல் நில அடையாளங்களை பறைசாற்றும் வகையில் ரூ.6 கோடியில் பூங்கா

நாகூர் கடற்கரையில் நெய்தல் நில அடையாளங்களை பறைசாற்றும் வகையில் ரூ.6 கோடியில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

Update: 2023-02-20 18:45 GMT

நாகூர்:

நாகூர் கடற்கரையில் நெய்தல் நில அடையாளங்களை பறைசாற்றும் வகையில் ரூ.6 கோடியில் பூங்கா அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

நாகூரில் பூங்கா

கடலும் கடல் சார்ந்த இடங்கள் நெய்தல் நிலப்பகுதியாகும். நெய்தல் நிலப்பகுதியான நாகை மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் நாகூர் கடற்கரையில் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை சார்பில் ரூ.6 கோடி மதிப்பில் நெய்தல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. 7.56 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த நெய்தல் பூங்கா திட்டப்பணிகள் குறித்து நாகூரில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது பூங்காவுக்கான இறுதிக்கட்ட வரைபடத்தை பார்வையிட்டனர்.

இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:- கடலும், கடல் சார்ந்த நெய்தல் நில மக்களின் வாழ்க்கை முறை, உணவு, தொழில், காலநிலை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடையாளமாக நாகூரில் நெய்தல் பூங்கா உருவாகிறது. அல்லிப்பூ இனங்களுடன் கூடிய குட்டைகள் அமைக்கப்பட உள்ளன.

6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

நெய்தல் நிலத்துக்கு உரித்தான புன்னை மரம், பனை மரம், நாவல் மற்றும் தென்னை மரங்கள் வளர்க்கப்பட உள்ளன. மீன் மற்றும் இதர கடல் வளங்களான பவளப்பாறை, முத்து சிப்பி போன்றவற்றை செடிகளால் அழகு வடிவங்களில் வடிவமைத்து காட்சிப்படுத்த இருக்கிறோம்.

கடல்வளம் மற்றும் மீனவர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் படகு வடிவிலான இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பூங்காவில் அமைய உள்ளன. பூங்கா கட்டுமான பணியை 6 மாதங்களுக்குள் முடிக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்