மருந்துக்கடை உரிமையாளரை தாக்கிய 6 பேர் கைது
கோவை மணியகாரம்பாளையத்தில் மருந்துக்கடை உரிமையாளரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கோவை
கோவை மணியகாரம்பாளையத்தில் மருந்துக்கடை உரிமையாளரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மருந்துக்கடை உரிமையாளர்
கோவை கணபதியை அடுத்துள்ள மணிகாரம்பாளையம் எம்.கே.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44). இவருக்கு மனைவி மற்றும் மகள், மகன் உள்ளனர். சுரேஷ் அதே பகுதியில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் மளிகை கடை உள்ளது.
இந்த கடையில் கணபதி வேதாம்பாள் நகரை சேர்ந்த பாலாஜி என்பவர் பகுதிநேர ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது பாலாஜி, சுரேஷ் மகளுடன் பேசி பழகி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சுரேஷ் மளிகை கடை உரிமையாளர் முத்துசாமியிடம் கூறி, பாலாஜியை பணியில் இருந்து நிறுத்திவிட்டார்.
தாக்குதல்
இந்த நிலையில் சுரேசின் மனைவி மகள், மகள் ஆகியோர் சொந்த ஊரான காரைக்குடிக்கு சென்றிருந்தனர். இதனால் சுரேஷ் மட்டும் வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று பாலாஜி தனது நண்பர்களுடன் சுரேஷ் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார்.
அப்போது பாலாஜி தனது நண்பர்களுடன் சேர்ந்து சுரேசை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த சுரேஷ் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சுரேஷ் வீட்டிற்கு 6 பேர் கும்பல் திடீரென சுரேசை கட்டையால் சரமாரியாக தாக்கிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
6 பேர் கைது
இதில் பலத்த காயம் அடைந்த சுரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் சுரேசை தாக்கியது தமிழக மக்கள் முன்னேற்ற கழக சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் பிரின்ஸ் சுந்தர் (வயது 61), கோத்தகிரியை சேர்ந்த தீபக் (39), சாயப்பாபா காலனியைச் சேர்ந்த வடிவேல் (46), சண்முகம் (42), நெல்லையை சேர்ந்த பெவின் (23), கோவை வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த ராஜாசிங் (42) என்பதும், பாலாஜி கூறியதன் பேரில் அவர்கள் சுரேசை தாக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.