இரும்பு கடை ஊழியர்களை காரில் கடத்தியதாக 6 பேர் கைது
சோழவரத்தில் இரும்பு கடை ஊழியர்களை காரில் கடத்தியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
பொன்னேரியை அடுத்த சோழவரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு கடை உள்ளது. இங்கு சோழவரம் காந்தி தெருவில் வசிக்கும் ஜெயபிரகாஷ் (வயது 29) வேலை செய்து வருகிறார். இவருடன் பாபு (21) மணிகண்டன் (35) ஆகியோரும் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் ரவுடி மாமூல் தராததால் 3 பேரையும் மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஜெயபிரகாஷின் மனைவி மீனா (24) சோழவரம் போலீசில் புகார் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
என்னுடைய கணவர் ஜெயபிரகாஷ் மற்றும் அவருடன் பாபு, மணிகண்டன் ஆகியோர் கடையில் வேலை செய்து வந்தனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரவுடிகள் கடைக்கு வந்து மாமூல் கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். கடையின் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்துவிட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு காரில் வந்த 4 பேர் எனது கணவர் ஜெயபிரகாஷிடம் உங்கள் முதலாளி எங்கே என்று கேட்டதும் அவர் வெளியூர் சென்று இருப்பதாக கூறினார்.இதனையடுத்து அவரையும். கடையில் வேலை செய்து வரும் பாபு, மணிகண்டன் ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி காரில் கடத்தி சென்றுவிட்டனர். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிரு்தார்.
போலீசார் தனிப்படை அமைத்து கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். செல்போன் டவர் சிக்னலை வைத்து புழல் காவாங்கரை பகுதியில் பதுங்கி இருந்த புழல் காவாங்கரையை சேர்ந்த கணேஷ் (25), பிரவீன்குமார் (22), ஜெயக்குமார் (24), தீபக் (26), முகமது அலி (38), ராஜி (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள், 2 கத்திகள் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 6 பேரும் பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.