வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது

கும்பகோணம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-06-09 19:58 GMT

கும்பகோணம்:-

கும்பகோணம் அருகே வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தகராறு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் பிரகாஷ் (வயது22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் சந்தோஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வளையப்பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இவர்களுக்கு முன்னால் சிகரெட்டை புகைத்தபடி ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரது சிகரெட்டின் சாம்பல், பின்னால் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த பிரகாஷ் நண்பர் சந்தோஷ் கண்ணில் பட்டதாக கூறப்படுகிறது.

கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் முன்னால் சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து நிறுத்தி தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் பிரகாஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் சேர்ந்து புகை பிடித்த நபரை தாக்கியுள்ளனர். இதையடுத்து அந்த நபர் செல்போன் மூலம் தனது நண்பர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் அங்கு வந்த புகைபிடித்த நபரின் கூட்டாளிகள் பிரகாஷ் மற்றும் சந்தோசை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சந்தோஷ் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

6 பேர் கைது

இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக வளையப்பேட்டை அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த குமார் மகன் கதிரவன் கார்த்தி (23), ராஜா மகன் செல்வம் (24), ஜோதி மகன் ஹரிஷ் என்கிற அப்பு (22), செல்வகுமார் மகன் விஜய் (26), முருகன் மகன் முகேஷ் (23), குணா மகன் ராகுல் (21) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்